நின் கூடுகை
ஜெனி சமைத்துக் கொண்டிருந்தாள். நான் எனது அறையில் உட்கார்ந்து எப்போதும்போல எழுதிக் கொண்டிருந்தேன். நேற்று நடந்த அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இந்த அமைதி அசாதாரனமானதுதான் என்றாலும், நிலைமை வேறுமாதிரி இருந்திருந்தால்தான் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.
ஜெனியை நானும் என்னை அவளும் கடந்த இரண்டாண்டுகளாக அறிவோம். ஆதலால் இந்தக் காலை இப்படியாகத்தான் புலரும் என்பதை நான் நிச்சயமாக அறிந்திருந்தேன்.
சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்து குருவி, தலையைநீட்டி ஏழுமுறை கத்தி, மறுபடியும் உள்ளிளுத்துக் கொண்டது. எழுந்து ஜன்னலின் திரைச்சீலையை விலக்கினேன். கோடைகாலச் சூரியன் ஏலவே மேலேறி இருந்தான். மத்திய லண்டன் பரபரக்க ஆரம்பித்திருந்தது. பரிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பதினெட்டாவது மாடியின் ஜன்னல் ஓரம் நின்று வெளியை வெறித்துக்கொண்டிருந்தேன். வீதியை மூடிப் பரந்து கிடந்த வெள்ளைத்தாள்களின் மீது பனி பூத்திருந்தது. நீளநீளமாக எட்டங்குலத்தில் நிலத்தில் விழுந்த நிழல்கள், கண்பார்த்திருக்க நீளத்தில் குறுகிக்கொண்டே வருவதை வெறித்துப் பார்த்தது மனது.
ஜெனி, எனக்கான தேநீரை எடுத்து வந்து மேசை மீது வைத்திருந்தாள். பொதி செய்யப்பட்ட அவளது உடமைகள் மூலையில் முடங்கிக் கிடந்தன. நான் தேநீர் கோப்பையை கையில் எடுத்து அருந்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு மிடறும் உள்ளே இறங்குகிறபோதும் இதுதான் அவள் எனக்குத் தயாரித்த கடைசித் தேநீர் எனும் நினைவு கடலலைபோல மீண்டும் மீண்டும் என் மனதின் கரையை மோதி மோதி நொட்டிக் கொண்டிருந்தது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்து இரண்டாண்டுகள் ஆயிற்று. நானும் அவளும் ஒன்றாக இருப்பதென முடிவெடுத்த பத்தாவதுநாள், இதே போன்றதொரு கோடைகாலக் காலையில் இந்த வீட்டில் குடியேறி இருந்தோம். மகிழ்ச்சியான அந்தக் காலையைக் கொண்டாட நான் ஷம்பைன் போத்தலைக் குலுக்கித் திறக்க முயற்சி செய்த அந்தக் கணம் ஒரு கவிதையின் முத்திரை வரிபோல இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. எனது வலதுகை மதுப்புட்டியை இறுகப் பற்றி இருந்தது. ஜெனி எனது இடதுபுறமாக நின்று என் இடுப்பில் கைவளைத்து, தலைசாய்த்து அவளது தங்கநிறக் கூந்தல் சரிய கண்களெல்லாம் மகிழ்ச்சி பொங்க நின்றிருந்தாள். ஜன்னல் திரைச்சீலை வழி கசிந்த உருகிய மங்கல் சூரியஒளி அவளது செங்கூந்தலுக்குள் நுழைந்து அதன் மூலை முடுக்கெல்லாம் தங்க மூலாம் பூசிக்கொண்டிருந்தது. அவள் எனது இடதுபுறமிருந்து வலதுகைக்கு மாறினாள். ஒரு மேகத்துண்டு மிதப்பதைப் போல அவளது உடல் இடமாறிற்று. நான் அவளையும் அவளது குழந்தைத்தனமான செய்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்றே பெரிய இரண்டு பனித்துளிகள் போன்றஅவளது கண்களில் நீர்கட்டி இருந்தது. ‘ம்ம்?’ என்றேன். ‘என்ன?’ என்பதைப் போல மெல்லிய புருவங்களை உயர்த்தினாள். காத்திருந்ததைப் போல அவளது இடதுகண்ணில் இருந்து முதலாவது கண்ணீர்த்துளி கன்னத்தில் உருண்டது. குவிந்த என் உதடுகள் சூடான அந்தக் கண்ணீர்த்துளியை பத்திரப்படுத்திக் கொள்ள, அவளது கண்களைப் பார்த்தவாறே, ‘கண்ணீர்?’ என்றேன். ‘மகிழ்ச்சியால்’ என்றாள். ‘மகிழ்ச்சியில் குழந்தைகளும்கூட அழுமா?’ என்றேன். குழந்தைபோல சிணுங்கி எனது இடதுமார்பில் செல்லமாகக் கடித்தாள். அவளை நகர்த்தி எனக்கு நேர் எதிரே கொண்டு வந்து நிறுத்தினேன். அவள் கண்களை உற்றுப்பார்த்து ‘இந்த மகிழ்ச்சி உன்னில் என்றும் நிலைத்திருக்க என் உயிர்கொண்டு கூடுமான எல்லா முயற்சிகளையும் செய்வேன்’ என அவளுக்கு வாக்கு கொடுத்தேன். அவள் என்னை அணைத்து உதட்டில் முத்தமிட்டாள். உதடுகள் ஒன்றைஒன்று கௌவிக்கிடக்க நீண்ட நெடுநேரம் விட்டகலாத அந்த முத்தத்தை, அவளது மூடிய பனிக்கண்களில் இருந்து தாரைதாரையாக கொட்டிய கண்ணீர் ஈரப்படுத்தி ஆசீர்வதித்தது. எப்போதும்போல எல்லாவற்றையும் அவளே ஆரம்பித்தாள். அவளது உடலின் இளஞ்சூடு என்னிலும் பரவ, இன்னும் பிரிக்கப்படாத புதிய தளவாடங்கள் பார்த்திருக்க, தரையில் மெத்தையை மட்டும் இழுத்துப்போட்டு அதில் மூர்க்கமாகக் கிடந்து புரண்டோம். நாழிகைகள் நகர, சுவருக்கு பூசப்பட்ட புதிய பூச்சின் வாசனை உடன் காமக்கழிவுகளின் வாசனையும் காற்றில் ஏறிக்கலந்து அந்த அறையை நிறைத்துக் கிடந்தது. அவ்வளவு மகிழ்ச்சியான அந்தநாளைப் பற்றி, நான் எழுதிக் கொண்டிருந்த, இன்னும் பெயரிடப்படாத எனது மூன்றாவது நாவலில் எழுதவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.
தேநீரின் மிதமான சூடு தொண்டைக்குழிக்குள் அமிர்தமென இறங்கியது. நூறு ஆயுள்களுக்கான தாகத்தை அந்த மிடறுகளுக்கிடையே கடந்து கொண்டிருந்தேன். இறுதி மிடறு பாதரசம்போல கெட்டியாக இருப்பதாகத் தோன்றியது. தொண்டையில் இடறி இறங்கும் தேநீரின் சுவையில் கசப்பேறி இருந்தது.
குருவித்தலை மணிக்கூண்டின் முட்கள் விரைவாகச் சுற்றியது. ஜெனி அவளது பிங்க் நிற பயணப்பெட்டியை எடுத்துவந்து முன்னறையில் வைத்தாள். மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தையின் கண்களில் இருக்கும் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தேன். என்னால் உணரமட்டுமே முடிந்த அந்தப் பார்வை எனக்கே வெறுப்பைத் தந்தது. எனது பார்வையை தவிர்த்த ஜெனி, வீட்டை ஒருமுறை சுற்றிப்பார்வையை சுழலவிட்டாள். கடைசியாக அந்தப்பார்வை என் கண்களில் நிலைகொள்வதை அவளால் தவிர்த்திருக்க முடியவில்லை. வலி நிறைந்த இரண்டு சோடிக்கண்கள் நேர்எதிரே சந்திக்க நேர்வது துர்பாக்கியமானது. நான் அவளது கண்களைத் தவிர்க்க முயன்று தோன்றேன். வலிந்து சிரிக்க முயன்றாள். நானும் முயன்றேன். என்னை நோக்கி வந்தாள். இருவரும் ஆரத்தழுவிக் கொண்டோம். காற்றின் வேகத்தில் இரண்டு மூங்கில்கள் கறடாக உரசிக்கொள்வதைப் போல மொறமொறவென இருந்த அந்தத்தழுவலில் வேறெந்த உணர்ச்சிகளும் இல்லை. அவளை நான் முதன் முறையாகச் சந்தித்தபோதும் இப்படியான ஒரு தழுவலுடன்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அந்தத்தழுவல்தான் எத்தனை கனிவானது!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வின் மிகமோசமான நாளொன்றில் லண்டன் ஈயூஸ்டன் இரயில்நிலைய வளாகத்தில் உள்ள pert a magerயில் கையில் ஒரு கோப்பைக் காப்பியும் கண்ணிறைய கண்ணீருமாக ஒதுங்கி, அடுத்தது என்ன எனத்தெரியாமல் ஒரு மூலையில் நின்றிருந்தபோது அவளாக வந்து பேசினாள்.
‘தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்’
குரல் வந்த திசையில் தலையை உயர்த்திப் பார்த்தேன். என்னைவிட உயரமான ஒரு ஆங்கிலப்பெண் நின்றிருந்தாள். தலைமுடி தங்கநிறத்தில் சுருள்சுருளாக இருந்தது. நீள்வட்ட முகத்தில், பருத்த கண்களும் கூர்மையான நாசியும். எப்போதும் சிரிப்பதுபோல மேல்நோக்கி வளைந்த உதடுகள். நீளமான கழுத்து, ததும்பி நிற்கும் மார்பகங்கள், மெல்லிய இடை, நீண்ட கால்கள். குஞ்சங்கள் தொங்கிய குட்டைப்பாவாடையும் கையில்லா மேற்சட்டையும் அணிந்த ஒரு பேரழகி கைக்குட்டை நீட்டிக்கொண்டு நின்றாள்.
‘உனக்கு இது உபயோகப்படலாம்’
தூய வெள்ளைநிறத்தில் இருந்தது அந்தக் கைக்குட்டை.
‘கவலைப்படாதே, புதிதுதான்’ எனக் கண்களை(ச்)சிமிட்டினாள். ஒரு புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டேன். என்னைப் பார்த்தவள் ஏதோ யோசித்தவளாய் கைகளை விரித்து என்னை அணைத்துக்கொண்டாள். கோடையில் மழைபோல அந்த அணைப்பு எனக்குத் தேவையாக இருந்தது. அன்னியனாக இருந்தாலும் தேவையின்போது அணைத்துக்கொள்ள ஒரு உடலும், சாய்ந்து அழ ஒருதோளும் எப்போதும் பெரும் ஆசுவாசமாக இருக்கிறது. நான் தேம்பி அழ ஆரம்பித்தேன். அவள் என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அவளின் உடலின் அணுக்கம் செந்தனலில் நீர்தெளித்து விடுவதைப்போல என்னை சாந்தப்படுத்துவதாக இருந்தது. அந்தத் தழுவலில் எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. ஆயினும் அது ஒரு தூய உறவின் தொடக்கப் புள்ளியாக இருந்தது.
மணிக்கூட்டின் குருவிதலையை நீட்டி ஒன்பதுமுறை கத்தியது. ஜெனி கையை நீட்டினாள். அதை இறுகப்பற்றிக் குலுக்கினேன். நான்கு குலுக்கல்களுக்குப்பிறகு பிடிதளர்த்தி தன்கையை விடுவித்துக் கொண்டவள், ‘சோ..!’ என்றாள்.
இந்த நாட்டில் எல்லாத் தீர்க்கமான முடிவுகளுக்கும் சற்றேமுன்னர் இந்த ‘சோ’ வந்து இடம்பிடித்துக் கொள்வதை நான் அவதானித்திருக்கிறேன். ஜெனியின் இந்த ‘சோ’விற்கு பின்னால் உள்ள தீர்கமான முடிவு நான் எதிர்பார்த்ததுதான் என்பதால், எந்தவித உணர்ச்சிகளையும் காட்டக்கூடாது என நான் ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன். அதன் பிரகாரம் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் பார்வையை விலக்கி ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தேன். வார்த்தைகளுடனேயே வாழ்பவர்களாக இருந்தாலும், சமயங்களில் எதிரில் நிற்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுவதற்கான நியாயங்களில் இருந்து தூரமாகிவிடுகிறோம். வார்த்தைகள் அற்று நான் நின்றிருக்க, எப்போதும் எனது இக்கட்டில் முன்வந்து உதவுபவள், இப்போதும் முன்வந்து அந்த வசனத்தை முடித்துவைத்தாள்;
‘சோ, தட்ஸ் இட்!’
நான் தேநீர் கோப்பையை கீழே வைத்து ‘யா, தட்ஸ் இட்?’ என்றேன்.அவளை சந்தித்த முதல் நாளின் ஞாபகங்கள் என்னைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தன.
Pert a magner வெறுமனே ஒரு சான்ட்விச் கடையாக மட்டும் என் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை என்பதை அன்று அவள் என்னை அணைத்துக் கொண்டிருக்கையில் நான் அறிந்திருக்கவில்லை. காப்பி ஆறிப்போயிருந்தது. அவ்வளவு நேரமாய் அவள் என்னைத் தழுவிக்கொண்டு நின்றிருந்தாள். அந்த இணக்கமான அணைப்பில் என் இறுக்கங்கள் கண்ணீருடன் கரைந்து போனதுபோல இருந்தது.
‘டு யூ பீல் பெட்டர்?’
‘செர்ட்ன்லி. தங்யூ’
‘குட்’ தலையை சிலுப்பி மீண்டும் ஒருமுறை என்னை அணைத்துக்கொண்டாள்.
‘பைதவே,ஐம் ஜெனி, ஜெனிபர் டார்வின்’
‘ஹாய் ஜெனி, ஐம் ஷர்மிளா. ஜஸ்ட் ஷர்மிளா’ எனச்சொல்லிச் சிரித்தேன். அவள் என்கைகளைப் பற்றிக்கொண்டே ‘நைஸ் மீட்டிங் யூ, ஜஸ்ட் ஷர்மிளா!’ எனக்கிண்டலாகச் சொன்னாள். இருவரும் சேர்ந்து சிரித்தோம். அவளுடைய சிரிப்பு வெண்கலப் பாத்திரத்தில் வெள்ளிக்காசைப் போட்டு ஆட்டியதைப் போல இருந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் சிரித்ததால், முகத்தின் நரம்புகள் ஒத்துழைக்க மறுத்ததன.
‘நான் உன்னை ஷர்மி என அழைப்பதில் உனக்கேதும் ஆட்சோபனைகள் உண்டா?’எனக்கேட்டாள். உள்ளத்ததால் அழகானவர்கள் பழக இலகுவானவர்களாகி மிகஎளிதாக நெருங்கி வந்துவிடுகிறார்கள். அவர்களிடம் எங்களுக்கு எந்த ஆட்சோபனைகளும் இருப்பதில்லை.
‘இல்லை. நீ அப்படி அழைப்பதில் எனக்கு ஆட்சோபனை இல்லை’
‘நல்லது….ஷர்மி! இந்தப்பெயர் எனது பழைய தோழி ஒருத்தியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது’. அதைச் சொல்லும்போது அவளது கண்கள் ஒருமுறை தாழ்ந்து எழுந்ததை அவதானித்தேன். அமைதியாக இருந்தோம். ஏதோ ஞாபகம் வந்தவளாய், ‘உனக்கு ஏதாவது சாப்பிட வாங்கட்டுமா?’ எனக் கேட்டுக்கொண்டே என் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தாள். அவளிடம் இருந்து வந்த மெல்லிய சென்டின் வாசனை அந்த இடத்தை நிரப்பி இருந்தது. அவளது நீளமான கழுத்தில் பச்சை நரம்புகள் தெரிந்தன. அவளது கண்ணில் ஆர்வம் குடிகொண்டிருந்தது. அந்த உயரமான இருக்கையில் கால்மேல் கால்போட்டு அவள் அமர்ந்திருக்க, குஞ்சம் வைத்த அவளது குட்டைப்பாவாடை சற்றே விலகி அவளது வழவழப்பான தொடை தெரிந்தது. நான் ஒரு பெண்ணை ரசிப்பது எனக்கு வினோதமாக இருந்தது.
நாங்கள் சாப்பிட்டு முடிந்து பணம்செலுத்த அவள் பையைத் திறந்தபோது அவளது பைக்குள் Simone de Beauvoir எழுதிய The Second Sex புத்தகம் இருப்பதைக்கண்டு நீ ஒரு ‘பெண்ணியவாதியா’ எனக் கேட்டேன். ‘இல்லை. ஏன் கேட்கிறாய்!’ என அவளது மெல்லிய புருவங்களை கேள்விக்குறி போல வளைத்தாள். ‘இல்லை…Simone யை வாசிக்கிறாய் போல தெரிகிறதே!’ என்றேன். அளவெடுத்து புன்னகைத்தாள். ‘நீ இலக்கியம், கோட்பாடுகள் எல்லாம் வாசிப்பாயா?’ எனத் தொடர்ந்தேன். ‘Simone யை வாசிப்பதால் நான் பெண்ணியவாதியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இன்றைய பெண்ணிய கோட்பாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை’.
நான் அமைதியாக இருந்தேன். பின்னர் வாசிப்புப் பற்றி அவளே அரைமணி நேரம் அடைமழை போல விடாது பேசினாள். நானும் கதைகள் எழுதி இருக்கிறேன் என அவளிடம் சொல்வதில் எனக்கு தயக்கங்கள் இருந்தது. ஆனாலும் சொல்வதில் இருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை. நான் அதை அவளிடம் சொன்னபோது, கண்கள் அகல ‘அப்படியா! என்னெல்லாம் எழுதி இருக்கிறாய்? எத்தனை நாவல்கள்? உனது புத்தகங்களை எனக்கு வாசிக்கக் கொடுக்கிறாயா?’ என வந்து விழுந்த தொடர் கேள்விகளால் எங்கிருந்து ஆரம்பிப்பது என நான் சிந்திந்து நிற்க, அவளோ உள்ளங்கையின் சூடு எனது புறங்கையில் தகிக்க எனது கைகளைப்பற்றி இருந்தாள்.
‘ம்ம் .. தருகிறேன். ஆனால் உன்னால் வாசிக்க முடியாதே‘
‘ஏன்?’
‘அவை தமிழில் எழுதப்பட்டவை’
‘அதற்கென்ன? உனது நூலின் மொழிபெயர்ப்பு இல்லையா?’
‘இல்லை! எங்கள் மொழியில் எழுதுவதே பெரிய விடயம். மொழிபெயர்ப்பெல்லாம் சான்ஸே இல்லை’
‘சரி, எத்தனை நாவல் எழுதி இருக்க?’
‘சிறுகதைதான் எனக்கான மார்க்கம். இதுவரையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. ஒரு மாறுதலுக்காக மூன்றாவதாக ஒரு நாவலை எழுதும் முயற்ச்சியில் இருக்கிறேன்’
‘அது எதைப்பற்றியது என நான் அறிந்து கொள்ளலாமா?’
‘அது ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை பற்றிப் பேசுகிற கதை’
‘உன் குடும்பக்கதையா?’
‘இருக்கலாம்’
‘நான் அதை வாசிக்கணுமே’ என்றவள், சற்றே யோசித்து ‘ஏன் நீ அதை எனக்காக மொழிபெயர்க்கக் கூடாது?’ என்றாள்.
எனது நாவலை நான் ஜெனியை சந்திப்பதற்கும் ஆறுமாதங்களுக்கு முன்னரே எழுத ஆரம்பித்திருந்தேன். அந்த நாவல் உறவுகளால் ஏமாற்றப்படும் ஒரு பெண் நாவலாசிரியையின் வாழ்வின் துயரைப் பற்றியது. அந்த நாட்களில் நான் இருந்த மனநிலையில் எழுதிய அந்த நாவலின் மூலப்பிரதி பெரும் துயரை அளவுகடந்த நாடகீயத் தன்மையுடன் எழுதியதாக இருந்தது. மூன்று தலைமுறைகள் பின்னோக்கி நகரும் கதையில், பெண் பாத்திரங்களின் வாழ்க்கைமுறை பற்றிய விபரிப்புக்கள் ஒரு பிரமாண்டமான கென்வஸில் வரையப்பட்ட நுணுக்கமான சித்திரத்தைப்போல விவரணமாக எழுதப்பட்டிருக்கும். கூறல்முறை மாறிமாறி அமைந்து, நாவலின் பாத்திரங்கள் அவரவர் நியாயங்களை அவரவரே எடுத்து வைப்பதாக வரும் ஒருபகுதியில் நாவலாசிரியையின் கணவனாக வருபவன் கூறுவதாக இப்படி ஒரு இடமிருக்கும்;
“எல்லா வாசல்களும் மூடப்பட்ட பின்பும், இன்னமும் கதவருகில் காத்திருப்பவள் பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்வது? அவள் கடந்துவந்த எல்லா வாசல்களுமே இங்கனமே சாத்தப்பட, பாதி திறந்திருந்த என்கதவு வழி கசிந்த கரும்புகையும் அவளுக்கான நம்பிக்கையின் குறியீடாகிப் போகுமளவுக்கு அவளது ஏமாற்றங்கள் மிகைத்திருந்த நாளொன்றில்தான் அவளுக்கான என்வாசலும் சாத்தப்பட்டது. கண்ணாடிக் கதவுகள் அவை. அதன் மறுபுறத்தே நின்று உள்ளே பார்த்துக் கெஞ்சும் அவளது குரல் மட்டும் என்னை எட்டுவதே இல்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டு எசக்கிள் மன்னனின் ஜெருசலநகரம் போல சிதைந்துபோன அவளது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இந்தக் காற்றுவெளி எங்கும் நிரம்பிக்கிடக்க, அவள்மீது பரிவுகொண்ட ஒருநாளில் அவளை ஆடுமேய்க்க கூட்டிச் சென்றிருந்தேன். தேர்ந்த இடைச்சி அவள். சுள்ளியை லாவகமாய் விரலிடுக்குகளில் சொருகி கைகளை காற்றில் அசையவிட்டவளின் நளினத்தில் தெறித்ததெல்லாம் பீத்தோவனின் ஒன்பதாம் சிம்போனி இசைக்குறிப்புகள் தாம். கண்களைத் திறந்தபோது இசை மிகஅருகில் இருந்தது பற்றி எண்ணிமுடிக்கையில் அன்புக்குப் பதில் வெறிப்பேறி இருந்தது என் நாடி நரம்பெல்லாம். சூனியக்காரிகளின் சூழ்ச்சி பற்றி நான் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டதைச் சொன்னபோது அவள் நம்ப மறுத்துவிட்டாள். பின்னர் அவள் நம்பியதை ஏற்க மறுத்துவிட்டாள். பனிக்காலம் தொடங்கி இரண்டு திங்கள் கழிந்தநிலையில் ஆறு கருநிறக்குதிரைகள் பூட்டிய சறுக்குவண்டியில் நெடுந்தூரபயணம் ஒன்றுக்குள் தொலைந்திருத்தோம். ரோமப்பேரரசின் கடைசி மன்னன் நீரோ கட்டுவித்த நாடகமாளிகை ஒன்றை(ப்)பார்க்கச் செல்வதாகத் திட்டம். வழிநெடுகிலும் அவள் வாசித்த ‘பிடில்’ இசை கொண்டு குறியீடாக ஏதோ ஒன்றை அவள் எனக்குணர்த்த வந்ததாகச் சொன்னபோது நான் சிரித்து வைத்தேன். ரோம்நகரம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தான் என்பது பொய்யான செய்தி என்பதை அவளிடம் நான் இன்றுவரைக்கும் சொல்லவே இல்லை. ரோமில் சலிப்புத்தட்டி திரும்பி வருகையில் குளிருக்கிதமாய் தீ மூட்ட சருகுகள் சேகரிக்கச் சென்றபோது உரசிய உடல்களில் இருந்து தெறித்த ஒரு சொட்டுத்தீ அந்த வனாந்தரம் முழுவதும் முனகு ஒலியாய் எதிரொலித்தது. பலவீனங்களை பலமாக்கிக் கொள்ளத் தெரிந்த வித்தைகள் எல்லாம் தோற்று நின்றபோது எழுந்த ஒற்றைவயலின் இசையில் காமத்தின் வாடை. கசிந்த கழிவகற்றி நிமிர்ந்தபோது சூரியன் மேற்கே மறைந்திருந்தான். பனிக்காலச் சூரியன் காலத்தை ஒருபோதும் சரியாகக் காட்டியதில்லை. பனியா மழையா எனத்தெரியாத ஏதோ ஒன்று தொடை நனைத்த போதில் முழிப்பு வந்தது. ஈரப்பிசுபிசுப்புத் தந்த கடுப்பில் படுக்கையை விட்டகல்கையில் சிறகுகள் பிடுங்கப்பட்ட தேவதைகள் சிலர் இன்னமும் என் கதவருகில் குந்திக் கிடந்தார்கள்”
நாவலின் இந்தப் பகுதியை நான் ஜெனியை சந்திப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்னரே எழுதி இருந்தேன். அதன்பிரதி ஒன்று எனது பையில் கனத்துக் கிடந்தது. அதை மொழிபெயர்த்துச் சொல்ல ஆரம்பித்தேன்.
‘கொஞ்சம் பொறு!’ என்றவள் நான் சொல்லச்சொல்ல ஒரு வெள்ளைத்தாளில் எழுத ஆரம்பித்தாள். நான் சொல்லி முடிந்ததும், சரிந்து கிடந்த சுருள்முடியை வாரிக் கூந்தல்கட்டி, பின்னால் எறிந்து, முன்னால் கிடந்த வெள்ளைத்தாளில் எழுதி இருந்ததை ஒவ்வொரு சொல்லாக, வசனமாக கவனமாக வாசித்து எடிட் செய்ய ஆரம்பித்தாள். எழுவாய் பயனிலைகள் இடம்பெயர்ந்தன. கற்றை கற்றையாக சொற்கள் வெட்டி எறியப்பட்டன. நான் சொன்ன பல சொற்களுக்கு ஒரு சொல் பிரதியீடாக மாற்றப்பட்டது.ஒரு சொல் பல சொற்களாகத் திரிந்தது. தாளில் ஒன்னரைப் பக்கங்களுக்கு எழுதப்பட்ட, நான் சொன்ன ஆங்கில மொழிபெயர்ப்பு, ஜெனி கைவைத்த பிறகு ஒரு பக்கத்துக்கும் குறைவாகச் சுருக்கப்பட்டது. எல்லாம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை வாசித்தவள், திருப்தி மேலோங்க தலைஆட்டி, பின் அவள் திருத்திய பிரதியை என்னிடம் நீட்டினாள். மொழி கெட்டியாகி, ரசமேறி, ஆங்கில மூலப்பிரதி ஒன்றை வாசிப்பதைப்போல இருந்தது. தமிழில் இருந்த ஓசைநயமும், நாடகீயத்தன்மையும் மொழிபெயர்ப்பிலும் இருந்ததுபோல இருந்தது. ஓரிரு இடங்களில் மட்டும் திருத்தங்கள் சொன்னேன். ஏற்றுக் கொண்டாள். எல்லாம் முடிந்து ஒருமுறை அவள் சத்தமாக எனக்கு வாசித்துக் காட்டியபோது என் கண்களில் நீர்கட்டியது. ‘John Banville யை வாசிப்பதைபோல இருக்கிறது’ என்றேன். ‘எனக்கும் ஐயர்லாந்துதான் பூர்வீகம் என்றாள். பின்னர் மீண்டும் ஒருமுறை வாசித்தாள். ஏதோ திருத்தங்கள் செய்தாள். பின்னர் மீண்டும் வாசித்தாள். தலையை நிமிர்ந்து எனைப்பார்த்தாள். அந்தக் கண்களில் தெளிவிருந்தது. ‘உன்னுடைய எழுத்து செவ்வியல்தன்மை கொண்டது’ என்றாள். பின்னர் செவ்வியல்பு பற்றி பேசினாள். ‘உனது மொழிபெயர்ப்பை எடிட் செய்கிறபோது அதன் அடர்த்தி புரிகிறது என்றாள். இந்த எழுத்தை நிச்சயம் ஆங்கில உலகம் கொண்டாடும். நீ எழுதிய எல்லாவற்றையும் மொழிபெயர்த்து எனக்கு அனுப்பு. நான் எடிட் செய்கிறேன். முடிந்ததும் பதிப்பிப்பதற்கும் நானே பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். Penguins பதிப்பக இணை இயக்குனர் எனது நண்பர்தான்’ என்று முடித்தாள். எல்லாம் கனவில் நடப்பதைப்போல இருந்தது. ‘உங்கள் தேவையின்போதும் ஊழிக்காலத்தின்போதும், தேவனானவர் உடன் இருக்கிறார்’ எனும் பைபிள் வாசகம் ஞாபகம் வந்தது. இறந்தகாலமும் அது சுமந்த வசைகளும் எண்ணங்களில் தூரநோக்கி நகர்ந்தன. கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தேம்பி அழ ஆரம்பித்தேன். அழுவதற்கு காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. அழுதால் போதுமானது. அழுதேன். ஜெனி ஏதோ புரிந்ததைப்போல என்னை அணைத்துக் கொண்டாள். அவளது நெற்றி என் நெற்றியோடு முட்டியது. நாசிகள் தொட்டுக் கொண்டன. அவளது உதடுகள் என் உதடுகளை உரசுவதை உணர முடிந்தது.
Euston TravelLodge யில் ஐந்துநாட்கள் தங்கி நாவலில் அதுவரையும் எழுதிய பெரும்பகுதியை இரவுபகலாக மொழிபெயர்த்தேன். ஒவ்வொருநாள் மாலையில் நானும் ஜெனியும் சந்தித்துக்கொள்கிற போது அன்று மொழிபெயர்த்த பகுதிகளை அவளிடம் கொடுப்பேன். வாசிப்பாள். பின்னர் என்னுடைய கையெழுத்தை விதந்து பேசுவாள். என் எழுத்து வசீகரமானது என ஒவ்வொரு தாளைப் புரட்டுகிற போதும் சொல்வாள். பின்னர் இருவரும் சேர்ந்தே எடிட் செய்ய ஆரம்பிப்போம். அவளது வேகத்தில் எனக்கு மூச்சுமுட்டியது. எடிட் செய்து முடித்ததும் அவள் சத்தமாக வாசிக்க ஆரம்பிப்பாள். நல்ல குயவன் கையில் அகப்பட்ட களிமண், உருக்கொள்வதைப் போல என் எழுத்து அவள் கைவைத்த பிறகு உருயேறி இருப்பதாக உணர்ந்தேன். நாவலை எழுதுகிறபோது இருந்த மனநிலை ஆங்கில மொழிபெயர்ப்பின்போது முற்றாக மாறி இருந்தது. ஏதோ யாரோ எழுதிய புதிய ஒரு நாவலை வாசிப்பதைப்போல இருந்தது. நாவலின் கனம் என்னை அழுத்துவதை உணர முடிந்தது. இத்தனை அழுத்தங்களை வாழ்வில் அனுபவித்தேன் எனும் எண்ணம் மனஉளைச்சலை உண்டுபன்னியது. நாவலின் போக்கில் பல இடங்களிலும் ஜெனியும் அழுதாள். ஐந்தாவது நாள் மாலையில் சந்தித்துக் கொள்கிறபோது ‘ஒரு பெண்ணை இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த முடியுமா?’ என அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் குந்தி இருந்தேன். ‘கீழைத்தேய ஆண்கள் கேவலமானவர்கள். பன்றியிலும் கீழானவர்கள்’ எனச் சொன்னாள். பின்னர் ‘உனது தந்தை எப்படி?’ என்று அவள் கேட்ட கேள்வி எனது சுயத்தைத் தீண்டியது. ‘கீழைத்தேய ஆண்கள் என அப்படிப் பொதுமைப்படுத்த முடியாது இல்லையா?, எல்லா இடங்களிலும் இவ்வாறான ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!’ எனச் சொன்னேன். ‘இருக்கலாம். ஆனால் சிகரட்டால் சூடு வைப்பதெல்லாம் வேறெங்கும் நடக்காது. அப்படிச் செய்பவன் ஒரு மனநோயாளியாக இருக்க வேண்டும்’ என்றாள். எனது வலதுகை, திட்டுத்திட்டாய் இருந்த எனது இடதுகையின் தோள்பட்டையை சுயமற்றுத் தடவியது. நான் அமைதியாக இருந்தேன். எங்களை அமைதி சூழ்ந்துகொண்ட போது அதன் பயங்கரத்தில் இருந்து வெளியேற விரும்பி ‘இது புனைவுதானே! புனைவின் சாத்தியங்களை பரீட்சிக்கும் முயற்சியாக்கூட இருக்கலாம் இல்லையா? ஏன் இவை எல்லாம் உண்மையில் நடந்ததாக நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?’ எனக் கேட்டேன். ‘புனைவு பற்றிய எனது நிலைப்பாடு முற்றிலும் வேறானது ஷர்மி. யதார்த்தவாதப் புனைவில் உயர்வுநவிற்சிகளின் மெய்யான தன்மையை பிரித்தறிதல் தேர்ந்த வாசக மனதிற்கு எளிதானதுதான்’ என்றவள், மௌனமாக என்னை அணைத்துக் கொண்டாள். நான் பதிலற்று, அசைவற்று நின்றேன். என் காதுகளில் மெல்லமாக ‘நான் குழந்தை இல்லை, ஷர்மி. என்னை இப்படி தள்ளி வைக்காதே’ என்றாள். அவளது இளமார்பகங்கள் என் நெஞ்சில் உருண்டு திரிந்தன. அவள் தன் உதடு கொண்டு என் உதடுகளை உரசினாள்.
அது ஒன்றும் சிக்கலானதாக இருக்கவில்லை. நாங்கள் தடையின்றி முத்தமிட்டுக் கொள்ளும் அளவிற்கு நெருங்கி இருந்தோம். காலம் தண்ணீரும் தண்ணீரும் மோதிக்கொள்வதைப் போல எங்களை அழைக்கழித்தது. ஒன்றாகி, ஒட்டி, பின்னர் விலகி… என்ன என விபரிக்க முடியாத ஏதோ ஒன்றை காலம் எங்களுக்கிடையில் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. முத்தம் அந்த விளையாட்டின் எச்சமாக பிதுங்கி வழிந்தது. எப்போதும் முத்தமொன்றுக்கான உந்துதல்களை ஜெனியே ஆரம்பித்தாள். எல்லாமும் தயாரானதும், அதற்காகவே காத்திருந்ததைப் போல நான் தலை சாய்த்துக்கொடுப்பேன். ஒரு பசிகொண்ட ஓநாயின் வேட்கை உடன் அவள் என் உதடுகளைக் கௌவுவாள். வாய்வழியே உயிர் உறிஞ்சிக் குடிப்பவள் போல என் கீழுதட்டைக் கடிப்பாள். ஆயினும் அந்த நேரங்களில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பவளைப்போல அவள் கண்கள் எப்போதும் மூடியே இருக்கும். உடல் சிலிர்க்க அந்த முத்தங்களை நான் அனுபவிக்கப் பழகி இருந்தேன். ஆண்களின் உதடுகள் கௌவிக் கிடந்த நிமிடங்களை எண்ணிப் பார்ப்பேன். ஒரு ஆணின் உதடுகள் இவ்வளவு மென்மையாக ஒருபோதும் இருப்பதில்லை. ஒரு பெண்ணின் ஸ்பரிசம் ஒரு ரோஜா மலரின் இதழ்கள் வருடுவதை விடவும் மென்மையானது என்பதை காமம் முற்றியபோதில், பொதுவெளியில் நின்று, எங்களுக்கிடையில் பரிமாறப்பட்ட முத்தங்கள் எனக்கு உணர்த்தின. என் படைப்பு மனம் பெண் உடல் பற்றிய வியப்பில் தகித்துப் புழுங்கிற்று. முத்தங்கள் அந்தத் தகிப்பின் சூட்டில் நெய்யென இறங்கிற்று. நாசி முறித்து கக்கிய சுவாசத்தின் எச்சம் அனல் காற்றாய் வெளியேறிற்று. இப்படியாகப் பரிமாறப்பட்ட முத்தங்கள் பற்றி உதடுகள் பிரிந்தபின்னர் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. குட்டையில் தேங்கிய ஊற்றுநீர் போல காமம் எங்களை அணைகட்டி நின்றது. இப்படியான ஒருநாளில் கண்கள் அகலவிரிய, சேர்ந்து வாழ்தல் பற்றி பேச ஆரம்பித்தாள் ஜெனி. அதற்கு முன்னர் நான் ஒருபோதும் ஒருபால் உறவில் இருந்ததில்லை. அது பற்றிய எண்ணங்கள்கூட எனக்கிருந்ததில்லை. உண்மையைச் சொல்வதென்றால், ஒருபால் உறவில் காமம் எப்படி கொண்டாட்டமாகும் எனும் ஒரு கேள்வி எனக்கெப்போதும் இருந்தது. ஆகவேதான் ஜெனி உடனான உறவு எனக்கு புதுமையாக இருந்தது. அவள் கொடுத்த முத்தங்கள் ஒரு கனவில் அடைந்த உச்சம் போல இருந்தது. நான் அதை முழுமையாக அனுபவித்தேன். ஜெனியின் கருணையும், அவள் என் எழுத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கைகளும் எனது எழுத்துச் செயற்பாடுகளுக்கு பெரும் ஊக்கியாக இருந்தது. அவளை நிராகரிப்பதற்கான வேறெந்தக் காரணங்களும் இல்லை. ஆயினும், ஒரு பெண்ணுடன் ஒருபால் உறவில் இருத்தல் என்னும் எண்ணமே ஒருவித அச்சத்தை உண்டு பன்னியது. நடுக்கடலில் திக்கற்று நிற்பவள் கைக்குக் கிடைத்த சிறுகுச்சி கரைசேர்க்குமா என்பதைப் பற்றி சிந்திப்பதைப் போல அபத்தம் வேறேதும் இல்லை. நான் ஜெனி உடன் சேர்ந்து வாழ்வதென முடிவு செய்தேன். அதைச் சொன்னபோது அவள் மகிழ்ச்சியில் தன் தனங்கள் ததும்ப துள்ளிக்குதித்தாள். இறுக அணைத்துக் கொண்டாள். முத்தமிட்டாள். நான் இன்னமும் சிறுகுச்சியைப் பற்றிக்கொண்டு கடலில் தத்தளிக்கும் திக்கற்றவளது மனநிலையிலேயே நின்றிருந்தேன்.
அன்றிரவு ஜெனி அவளது வீட்டிற்கு என்னை அழைத்துப் போனாள். ஒரு அமாவாசை இரவில் ஒரு பெண்ணுடலின் தேடலின் சாத்தியங்கள் அனைத்தையும் என்னில் அரங்கேற்றிக் காட்டினாள். அது வேறொரு உலகம். ஆனால் நிச்சயமாக அந்த உலகத்தை ஒரு ஆணால் ஒரு பெண்ணிற்கு காட்டிவிடவே முடியாது. கண்களைக் கட்டி, நிலத்தில் கிடத்தி, கறடான ஒரு குகைவழியில் சீறுகீறல்கூட இல்லாமல் ஒரு பெண்ணை இழுத்துச் செல்ல, பெண்ணுடலில் வாழும் இன்னொரு பெண்ணால் மட்டுமே முடியும்.
தெகிட்டத் தெகிட்ட காமம் பயின்ற இரவு அது. உச்சம் பலமுறை தலையில் அடித்து, பித்துக் கலங்கி, அண்ட சராசரமும் ஆண்டொழுகி, சர்வமும் அடங்கி வெற்றுடலாய் கைகால்கள் விரிந்து மல்லாந்து கிடக்கையில், அருகில் கிடக்கும் பெண் ஷேக்ஸ்பியரை வாசித்தல் பற்றிய கற்பனை எவ்வளவு பிரமாண்டமானது! அந்த பிரமாண்டம் அன்று நிஜத்தில் நிகழ்ந்தது. Prince Hamlet பித்து மனநிலையில் யாரும் சுற்றி இல்லாத ஒருபொழுதில் உளறிய to be, or not to be யை ஒப்புவித்துக் கொண்டிருந்தாள் ஜெனி. அவளுக்கு அந்தக் கணத்தில் அதை என்னிடம் கேட்கக் தோன்றி இருக்கலாம். அது அவளது மனநிலையை பிரதிபலிப்பதாக நான் எண்ணிக்கொண்டேன். நானோ மூலையில் நின்ற Ophelia யாவைப் போல இருப்பதாகத் தோன்றியது. ஒஃபிலியாக்கள் எப்போதும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.
To be, or not to be?
அன்றில் இருந்து பத்தாவது நாளில் நானும் ஜெனியும் ஒரேவீட்டில் வசிக்க ஆரம்பித்தோம். ஆரம்பிக்கையில் அந்த உறவு எனக்கு புதுச்செருப்பைப் போல இருந்தது. நான் பேச்சில் நடையில் கொஞ்சம் கவனமாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஜெனி மிகச் சாதாரணமாக நடந்து கொண்டாள். அவளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. அவளைச் சந்திக்க அவளது முன்னால் காதலிகள் எல்லாம் சாதாரனமாக அந்த வீட்டுக்கு வந்து போயினர்.
நான் எனது மூன்றாவது நாவலில் அதுவரையில் எழுதி, மொழிபெயர்த்து வைத்ததை ஜெனி ஏற்கனவே எடிட் செய்து வைத்திருந்தாள். பத்து முறைகளுக்கு மேல் வாசித்துப் பார்த்திருப்பேன். கண்ணாடி துழைத்த சன்னம்போல இருந்தது. ஜெனியை கட்டிக் கொண்டழுதேன். ‘நீ உலகம் போற்றும் நாவலாசிரியையாய் வருவாய்’ என என் காதுகளில் முணுமுணுத்தாள். அந்த வார்த்தை மிகஅருகில், ஒரு அசரீரி போல எனக்குள் ஒலித்தது.
எனது வாழ்வில் ஜெனியின் வருகைக்குப் பிறகான பக்கங்கள் முற்றாக வேறு வண்ணங்களைக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியும் கூடலும் என்னை சற்றே மிதப்படுத்தி இருந்தது. நான் நாவல் வேலைகளுக்கு நடுவே சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அது சௌகரியமாக இருந்தது. நாவலை தொடர்ந்து எழுதுவதில் ஏதோ முடை இருப்பதைப்போல உணர்ந்தேன். ஜெனியும் நான் எழுதிய சில பக்கங்களை எடிட் செய்வதில் அசமந்தமாக இருந்தாள். காரணம் கேட்டபோது, நான் எழுதிய பக்கங்கங்களில் ரசமில்லை என நாசூக்காகச் சொன்னாள். அதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஆறுமாதங்கள் ஆயிற்று.
எனக்கு நாவல் எழுதுவதில் திருப்தி இல்லை என்கிற நிலையை அடைந்திருந்தேன். எங்கே பிழைக்கிறது என தேட ஆரம்பித்தேன். ஜெனி சொன்னது உண்மைதான்; இந்த ஆறுமாதத்தில் நான் எழுதிய எழுத்தில் வீரியம் குறைந்திருந்தது. தடத்தைவிட்டு விலகிய பல்வரிசை போல, புதிதாக எழுதி நிரம்பிய பக்கங்கள் துருத்திக்கொண்டு நின்றன. ஏன் இப்படி? என்கிற கேள்வி சதாகாலமும் என்னை அலைக்கழித்தது. அதன் தொடர்ச்சியாய், மகிழ்ச்சியான மனநிலையில் துயரத்தை பாடமுடியாது என்கிற முடிவை எட்ட எனக்கு இன்னும் மூன்று மாதங்கள் ஆயிற்று. நான் எழுதிய மூலப்பிரதியில் இருந்து சுமார் எண்பது பக்கங்களைக் கிழித்து எறிந்தேன். அது ஒரு பைத்தியகரமான மனநிலை. அந்த மனநிலையில் இருந்து வெளியேறும் வடிகால்களாக நான் எழுதிய சிறுகதைகள் அமைந்தன. நான் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். அவற்றையும் நானே மொழிபெயர்த்தேன். ஆனால் கதைகளை ஜெனி உடன் பகிர்ந்து கொள்வதில் ஏனோ எனக்கு ஆர்வமிருக்கவில்லை. என் கதைகளை வாசிப்பதற்கு வேறுஆள் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.
அந்த நாட்களில் Russel Square வில் உள்ள Skoob books ஒருங்கிணைத்த சிறுகதை கலந்துரையாடல்களை ஜெனிதான் எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தாள். British Library முற்றத்தில் திறந்தவெளியில் நடக்கும் கலந்துரையாடல் அது. பதிவு செய்யப்பட்ட சுமார் இருபத்தைந்து இலக்கிய ஆர்வலர்கள் கூடுவார்கள். கலந்துரையாடல் விவாதமாக சூடுபிடிக்கும். இலக்கியத்தின் தீவிர செயற்பாடுகளை கண்ணுறல் அலாதியாது. ஜெனிக்கு சிறுகதை மீது பெரிய ஆர்வமில்லாததால் அவள் அந்த விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. அவள் நாவல்களை மட்டுமே ரசிக்கக் கூடியவளாக இருந்தாள். நான் மட்டும் தொடர்ந்து அந்தக் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தேன். அங்குதான் கிரிஸ்டோபர் அறிமுகமானான். ஆறடியும் மூன்றங்குலமும் உயரங்கொண்ட மிகத்தீவிரமான இலக்கிய வாசகனும், விமர்சகனும். அவனுடன் என்னுடைய சிறுகதைகளை பகிர்ந்துகொள்வதில் எனக்கு சிக்கல்கள் இருக்கவில்லை. அப்படியாக நான் கொடுத்த பத்துக்கதைகளில் இரண்டு கதைகளை Paris Review விற்கு அனுப்புவதாகச் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டான். ‘தாளில் எழுதுவதை எப்போது நிறுத்தப்போகிறாய்? கணினியில் எழுதுவதில் அப்படி என்ன பிரச்சனை?’ என அவன் கேட்டபோது ‘நான் old school’ எனப் பதில் சொல்லி கண்ணைக் சிமிட்டிக்கொண்டேன்.
இந்தாண்டு வசந்தகாலம் ஆரம்பித்தபோது ‘இலை உதிர்காலம் ஆரம்பிக்கும் முன்னர் நாவலை முடித்துவிடுவது’ என திட்டம் கொண்டேன். கதையின் நாயகியான நாவலாசிரியை லண்டனில் ஒரு பெண்ணைச் சந்திப்பதாக புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது. பக்கங்கள் நிரம்பி வழிந்தன. எழுத்து மடை திறந்து பாய்ந்தோடிற்று. மடை மறித்து பாத்திகட்டி அத்தியாயங்கள் கட்டி எழுப்பப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அவற்றை உடனே மொழிபெயர்த்தும் வைத்தேன். இருபதே நாளில் நாவலை முடித்து ‘நின்கூடுகை’ எனத் தலைப்பிட்டு மூடி வைத்தபோது மனசை அழுத்தி இருந்த பெரும் பாராங்கல் விலகி உருண்டோடி பள்ளத்தில் விழுந்ததைப்போல பெரும் ஆசுவாசமாக இருந்தது. ஒரு பெருங்கனவின் முகவுரை இந்த நாவல். அந்தக் கனவின் வாசலை மூட இருந்த எல்லாவற்றில் இருந்தும் நான் ஒதுங்கி வந்தேன்.ஒரு தேவதையைப் போல ஜெனி வந்தாள். ஆங்கிலத்தில் இந்த நாவலை எழுத வைத்து என் கனவை இன்னும் அகலமாக்கி வைத்தாள். இந்த நாவலை ஜெனிக்கு சமர்ப்பிப்பதாக எழுதி வைத்தேன்.முறுக்கி விட்ட நீர்த்திவலைகள் போல சிலிர்த்த உடலை சிலுப்பி விட்டுக்கொண்டேன்.மூச்சை நன்கு இழுந்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஏதாவது புகைக்கவேண்டும் போல இருந்தது.
இனி நாவல் எழுதுவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தேன். ஏதாவதொன்றில் இருந்து முற்றாக விலகிவிட, எப்போதும் ஏதோவொரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.
கோடைவிடுமுறையில் பிரான்ஸ் போன ஜெனி, A4தாளில் சுமார் ஆயிரம் பக்கங்களுக்கு என் கைப்பட எழுதப்பட்ட ‘நின்கூடுகை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பை பொதிகட்டி அவளது பிங்க் நிறப்பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றாள். ஒருமாதம் தங்கி நாவலை முற்றாக எடிட் செய்து முடித்த பின்னர்தான் வருவதாகச் சொல்லி இருந்தாள். இடையில் ஒருமுறை போனில் அழைத்து மொழிபெயர்ப்புப் பணி நினைத்ததை விட வேகமாகவும் சிறப்பாகவும் வருவதாவும்,
‘நீ பெரும் எழுத்துக்காரி, இந்த உலகம் உன்னைக் கொண்டாடும்’ எனவும் உற்சாகம் ததும்பச் சொன்னாள். அவளது பேச்சில் நாணயமும், அவளது உணர்ச்சிகளில் உண்மையும் இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
மூன்று வாரங்கூட ஆகி இருக்கவில்லை. நேற்று அதிகாலை மூன்றுமணி இருக்கும்; எனக்கு இன்பதிர்ச்சி தருவதற்காகவோ என்னவோ, என்னிடம் அறிவிக்காமல் வீட்டிற்கு வந்தவள் எங்களுடைய கட்டிலில் நானும் கிரிஸ்டோபரும் அம்மணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள். இழுத்துவிடப்பட்ட கஞ்சாபுகை அந்த அறையை முற்றாக நிரப்பி இருந்தது. உறைந்து நின்ற ஜெனி ஒரு வார்த்தை பேசவில்லை. பையைத்திறந்து கட்டாக இருந்த பேப்பர்களை எடுத்தாள். ஒருமுறை என்னையும் பேப்பரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டாள். ஏதோ முடிவிற்கு வந்தவளைப்போல, தலையை ஆட்டினாள். கிரிஸ்டோபர் மெல்ல எழுந்து ஆடைகளை அணிந்துகொண்டு தனக்கெதுவும் தெரியாது என்பதைப்போல நழுவிப் போனான். ஜெனி நிதானமாக நடந்து முன்னறையின் ஜன்னலைத் திறந்து கையில் இருந்த பேப்பர்களை நாலாபுறமும் விசிறி அடித்தாள். அந்தக் கட்டடத்தின் பதினெட்டாவது மாடியில் இருந்து வெள்ளைத்தாள் மழை பொழிந்தது. நான் அசைவற்றுக் கிடந்தேன். தன் செய்கையில் தீவிரமும் அதேநேரம் நிதானமும் கொண்டிருந்த ஜெனி, எனது அலுவலக மேசையில் இருந்த பெட்டியில் இருந்து ‘நின்கூடுகையின்’ தமிழ் மூலப்பிரதியையும் மேலும் சில சிறுகதைகளின் பிரிதிகளையும் எடுத்து வானில் விசிறி அடித்தாள். மின்னொளியில் வெள்ளைப்பறவைகள் போல மிதந்த அந்தக் காகிதங்களுக்கு இனி எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை.
‘Good night ஷர்மிளா. எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்கப்போறன்’ என்றவள் எதுவும் நடக்காததுபோல தூங்கப்போனாள்.
ஷேக்ஸ்பியரின் to be, or not to be, ஜெனியின் குரலில் என் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தது.
‘Good night ஜெனிபர்’.
குருவி, தலையை நீட்டி பதினொரு முறை கத்தியது. ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது பிங்க் நிறப் பெட்டியை உருட்டிக்கொண்டு, வீதியில் பரவிக் கிடந்த வெள்ளைத் தாள்களை மிதித்து நடந்து கடந்து போய்க்கொண்டிருந்தாள் ஜெனி.
15:32
08/07/2018
22,Bishopsgate
London
London