புனைவு எனும் புதிர்

19797648-BC00-4FA2-8E27-05E9D40B3840

இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என நினைத்தேன். நேரமின்மையால் இந்தச் சிறுகுறிப்பு.

இது நிச்சயமாக பரவலாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். குறிப்பாக தமிழின் புதிய இலக்கிய வாசகர்கள் நிச்சயம் இதை ஒருமுறை வாசிக்க வேண்டும். கதைகளில் எது மேம்பட்டு இலக்கியமாகிறது எனும் புள்ளியில் இருந்து மாமல்லன் இந்தத் தொகுதியில் அவர் தேர்ந்தெடுத்த 12 கதைகளையும் மிகச் சுருக்கமாக விளக்கி விடுகிறார். ஒரு ஆரம்ப கட்ட வாசகனுக்கு அது கதையின் பல திறப்புகளை தெளிவாக்கும்.

என்னை முதலில் ஆச்சரியப்படுத்தியது மாமல்லனுடைய கதைத் தேர்வுகள்தான். அவர் தேர்ந்தெடுத்த 12 கதைகளும் 12விதமான கதைகள். குறியீட்டுகொரு கதை, படிமத்துக்கொரு கதை, அங்கதத்திற்கொரு கதை, யுக்திக்கொரு கதை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. எல்லாக் கதையும் cult classic வகையறா.

அவருடைய 12 கட்டுரைகளிலும் அக்குறித்த கதை எங்கனம் உயர்ந்த இலக்கியமாகிறது என்பதை விளக்குகிறார் ஆசிரியர். இவ்வளவு எழுதிவிட்டும், ஓரிடத்தில், எது இலக்கியமாகிறது எனக் கேட்டால் அதை இலகுவில் விளக்கிவிட முடியாது என்கிறார். என்னென்றால், அது படித்து புரிந்துகொள்ளக்கூடியது மட்டுமல்ல, உணர வேண்டியது. உணர்த்தக்கூடியது என்கிறார்.

இன்னும் சில விடயங்களையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது. கிராவின் ‘மின்னல்’ சிறுகதையை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்த போது இவ்வளவு எளிமையாக ஒரு கதையை எழுதிவிட முடியுமா என வியந்திருக்கிறேன். ஒரு முற்றிய கோடையின் பகல்பொழுதொன்றில் டவுன் பஸ்ஸில் அகப்பட்டு அல்லோலப்படும் மக்களின் தவிப்பை சொல்வதாக ஆரம்பிக்கும் கதை, இடையில் ஒரு நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய ஒரு இளந்தாயாலும் அவளது கைக்குழந்தையினாலும் எங்கனம் அந்தப் புழுக்கத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என்பதை சொல்வதுதான் முழுக்கதையும். கிரா இந்தக் கதையை 1960களில் எழுதி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சில் இருந்து Mercy எனும் ஒரு குறும்படம் வெளியாகி இருந்தது. அதை கீழே உள்ள லிங்கில் பாருங்கள்.

கிராவினுடைய மின்னல் சிறுகதையினதும், Mercy திரைப்படத்தினதும் சாரம் ஒன்னுதான். Mercy பார்த்த போது, இதை எங்கள் கிரா 1960யிலேயே சொல்லிட்டார்யா எனச் சொல்லிக்கொண்டேன்.

இடாலோ கல்வினோவின் ஒருகதையில், ஒருநபர் அந்தக் கதையின் கதை சொல்லியைப் பின்தொடர்வதைப் போல எழுதி இருப்பார். (அந்தக் கதையின் பெயர் மறைந்துவிட்டது. ஞாபகம் வந்ததும் இணைத்துவிடுகிறேன்) மிகச் சிறப்பாதொரு கதை அது. மௌனி அதைவிடச் சிறப்பாக எழுதிய கதைதான் ‘மாறாட்டம்’

06711A79-80E7-49C0-AF52-10314DB912D0

வண்ண நிலவனின் மிருகம் எனக்கு the pianist திரைப்படத்தை ஞாபகப்படுத்தும்.
கு.பெ.ராவின் சிறுது வெளிச்சம் பிரபஞ்சனின் ‘மனுஷி’ கதையை ஞாபகப்படுத்தும்.

இப்படியாக மாமல்லன் இந்தத் தொகுப்பில் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு கதையும் மணி மணியானவை.

ஆனாலும், readers text எனும் ஒரு விடயம் இருக்கிறது. அதாவது வாசகனின் பிரதி. அது ஒருபோதும் author’s text உடன் 100% உடன்பட்டுப் புரிந்துகொள்ளப்படுவதே இல்லை. ஒரு படைப்பை வாசிக்கிற ஒவ்வொரு வாசகனும் தனக்கான பிரதியை அவனது அனுபவங்களினூடே உருவகித்துக்கொள்கிறான். அது ஒவ்வொரு வாசகனிலும் வெவ்வேறு பிரதியாகிப் போகிறது. ஆக, ஒரு படைப்பை ஒருவர் இன்னொருவருக்கு விளக்கிச் சொல்லிவிடவே முடியாது. ஆனால் மாமல்லன் இந்தத் தொகுப்பில் செய்திருப்பது படைப்பை விளக்குகிற வேலையை அல்ல. மாறாக அந்தப் படைப்புகளில் ஒளிந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்த்து விடுகிறார், அவ்வளவுதான். அதற்குப் பிறகும் அதைப் புரிந்துகொண்டு தனக்கான பிரதியை உருவகித்துக்கொள்வது வாசகனது கையில்தான் இருக்கிறது.

கடைசியாக ஒரு விடயம்,
இந்தத் தொகுப்பில் எல்லாக்கதைகளையும் தன்னுடைய முன்னோடிகளிடம் இருந்து தெரிந்து எடுத்துக்கொண்ட மாமல்லன், அவருடைய சமகாலத்தவரான ஒரே ஒரு எழுத்தாளனின் கதையை மட்டும் எடுத்திருக்கிறார். அது என் காதலன் ஷோபா சக்தியினுடைய வெள்ளிக்கிழமை எனும் சிறுகதை. எதற்காக இந்தக் கதையை மாமல்லன் தெரிந்தெடுத்தார் என்பது தெரியவில்லை. அதேபோல ஏன் மற்றைய தற்கால எழுத்தாளர்களது கதைகளும் இல்லை என்பது கூட தெரியவில்லை. அது ஆசிரியரின் உரிமை என்பதால் அதில் தலையிட எமக்கு அனுமதி இல்லை. ஆயினும், ஒரு வாசகனாக மாமல்லன் தன்னுடைய சமகாலத்தவர்களது கதைகளையும் எடுத்து விளக்க வேண்டும் என்கிற அவாவை மேவமுடியவில்லை.

B28DF26A-077F-4BD9-B2B8-139AF7978199

நன்றி மாமல்லன், உங்களுடைய இந்தப் புத்தகம் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பல புதிய வாசகர்களை நிச்சயம் கொண்டுவரும். தொடர்க உங்கள் பணி.

Leave a comment